Tuesday, January 6, 2015

எச்சரிக்கை... (அ) Be Careful...




எச்சரிக்கை... (அ) Be Careful...

இந்த புது வருஷ பிறப்பின் போது ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ  ஒரு க்ஷணத்தில் திரும்பவும் ப்ளாக் தொடருவது என்று ந்யூ இயர் ரெஷல்யூஷ வைராக்ய  உந்துதலில் சபதம் மாதிரி செய்து  விட்டேன்.

இந்த முடிவுக்கும் சமீபத்திய சனிப் பெயர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை உங்களுக்கே விட்டு கொடுத்து விடுகிறேன்.

ஈஸ்வரோ ரக்ஷது...

Monday, November 22, 2010

புது மொழி

BBS...

BTW...

CMi...

BIL...

PRL...

LOL...

ROFL...

WTF; whrz da p@rty?

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களுக்கு புரிந்தால் நீங்கள் கண்டிப்பாக 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  நீங்கள் இருபது வயதுக்கு மேற்பட்டவராக இருந்து மேற்படி சமாசாரம் முழுவதும் புரிந்தால் நீங்கள் மனதளவில் இன்னும் யூத்தாக மற்றும் கால தேச வர்த்தமானத்தோடு  up - to - date ஆக   இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேற்படி சமாசாரம் பாதி மட்டும் புரியுமானால் நீங்கள் இருபது வயதுக்கு கீழானவர் என்றால் யூத் லிஸ்டிலிரிந்து வெறுத்து விலக்கி வைக்கப்படும் அபாயதிலிருக்கிறீர்கள்.  இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் யூத்தாய் வேகமாக காலாவதியாகி வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ளவும்.

மேற்படி விஷயம் எதுவுமே உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் வயதானவர் லிஸ்டில் சேர்க்கப்பட்டு உங்களுக்கும் தற்போதைய ஜெனரேஷனுக்கும் உள்ள இடைவெளி ஒளி வருடங்களில் கணிக்கப்படும் அபாயதிலிருக்கிறீர்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சாம்பிள் இன்றைய புதிய தலைமுறையின் நவமொழி.  ஆங்கிலத்தில் "sms lingo" அல்லது "chatspeak".

இந்த மொழியில் தான் இன்றைய தலைமுறை மிக மிக அனாயாசமாக செல்போன்களிலும், 'ஸ்மார்ட்' போன்களிலும், ஜிடாக், யாஹூ போன்ற மெசஞ்சர்களிலும், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் உரையாடுகிறது, பேசுகிறது, சந்தோஷிக்கிறது, வருந்துகிறது, தகவல் பரிமாறுகிறது. ஆங்கிலத்தோடு தமிழ் ஹிந்தி மற்றும் இன்னபிற மொழிகளையும் கலந்து கட்டி அவியலாய் ஊடு கட்டி அடிக்கிறது.

தான் அலை பேசிக்கொண்டிருக்கையில் அருகாமையில் பெற்றோர் இருந்தால் PRL PCMi later என்று குறுஞ்செய்தி அனுப்புகிறது.  இம்மாதிரி குறுஞ்செய்திகளைப் படிக்க நேர்ந்தால் அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் பெற்றோர்கள் "ஞே" என்பதையும் தாண்டி முழியோமுழி என்று முழிக்கிறார்கள்.

இந்த மொழியில்  cryptical தன்மை கொஞ்சம் மற்றும்  convenience நிறைய என்று தோன்றுகிறது.
செல்போன்கள் வந்த காலத்தில் சிறிய கீபோர்டில் மெசேஜ் டைப் பண்ணும்  அசௌகர்யங்களில் இந்த மொழியின் தோற்றுவாய் இருந்திருக்கும் சாத்தியங்கள் ஏராளம்.  முன்புபோல் இல்லாமல் தற்போது டைப்ரைடிங் இன்ஸ்டிடியூட்கள் வழக்கொழிந்து போனதும் ஒரு காரணி என்றே சொல்லத்தோன்றுகிறது. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  140 கேரக்டர்களுக்குள் தங்களின் கருத்தை சொல்லவேண்டிய நிர்பந்தம் போன்றவை இம்மொழியின் வளர்ச்சிக்கு உரமாயிருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இம்மொழியின் cryptic தன்மை காலப்போக்கில் ரகசியம் கருதி ஏற்பட்டிருக்கலாம்.
 
இம்மொழிக்கு எதிராக பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.  ஒழுங்கான வார்தையமைப்பு இல்லை; இலக்கணம் அறவே இல்லை; சின்டாக்ஸ் இல்லை என்றெல்லாம்.  ஏன் இதெல்லாம் மொழியே இல்லை என்று விமர்சிப்பவர்களும் உண்டு. இந்த விமர்சனங்களில் உண்மை இருந்தாலும், அப்படி விமர்சிப்பவர் "பழம் பஞ்சாங்கம்" என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கித் தள்ளப்படும் அபாயமான சாத்தியக்கூறு தான் தென்படுகிறது.  மேலும், இதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  நீங்கள் எங்களை தொந்தரவு செய்யாமல் உங்கள் தி ஹிந்து ந்யூஸ்பேப்பர் மற்றும் ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி மற்றும் ரென் அண்டு மார்டின் இவைகளை கட்டிக்கொண்டு சௌக்கியமாய் இருங்கள் என்று அவர்கள் சொல்லக்கூடும். இம்மொழி தற்போது அலுவலகங்களில் அனுப்பப்படும் ஈ -மெயில்களிலும் மெல்ல ஊடுருவல் செய்திருப்பது தான் கொஞ்சம் கவலை அளிக்கிறது.  ஒரு சாரார் இதைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள்.  வருந்துகிறார்கள்.


இதற்க்கு தீர்வுதான் என்ன? என்று அறிந்துகொள்ள சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தினால், அவர் "பழகிப் பாப்போம்யா, அப்பத்தேன் புரியும்.  போங்கய்யா! நல்லா பழகுங்க" என்றே தீர்ப்பு சொல்லக் கூடும்.

என்ன?

r u redi 2 join da p@rty?

***********************************************


பெயர் பலகையில் தமிழ் வளர்க்கும் முயற்சியில் சில சுவாரஸ்யங்கள் :

ஸ்வீட் ஸ்டால்  - இனிப்பகம்...
ஸ்நாக்ஸ் பார் - நொறுவையகம்...
டீ ஸ்டால்  - தேநீரகம்....
பேக்கரி  - அடுமனையகம்...
சலூன்  - முடிதிருத்தகம்...
ஹார்டுவேர் - வன்பொருளகம்...

ஒரு சின்ன சந்தேகம்!!

இப்படி அகம்.. அகம்.. என்றே எல்லாம் தமிழ் 'படுத்த'ப்பட்டிருக்கும் போது toilet என்பதற்கு மட்டும் ஏன் கழிப்பகம் (அ) விடிப்பகம் (அ) பேளகம் என்று மாற்றாமல் கழிப்பறை என்றே விட்டு வைத்திருக்கிறார்கள்?

சரியான விடை தெரிந்தவர்கள் கூறினால் அவர்களுக்கு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் கூடுதலாய் கிடைக்கும்படி இயற்கையிடம் பிரார்த்தனை செய்கிறேன். 

Saturday, July 24, 2010

மொட்டை தலையும் ... முழங்காலும்....

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பார்களே...
அது உண்மையாகிவிடும் போலிருக்கிறது...

பசு மாடுகளுக்கும் அதி நவீன கணினி தரவு மையத்திற்கும் (data center) என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

சம்பந்தம் இருக்கிறது என்கிறது உலகின் முன்னணி  கணினி தயாரிப்பு நிறுவனமான  ஹ்யூலட் பக்கார்ட் (HP ).

இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் கணினி தரவு மையம் என்பது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது.  இந்த தரவு மையங்களினால் நம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். தரவு மையங்களிலிருந்து வெளி வரும் வெப்பம், அதை இயக்க தேவைப்படும் மின்சாரம், மின்சார உற்பத்தியில்  ஏற்படும் சுட்ட்றுச் சூழல் கேடுகள், அந்த மையங்களுக்கு தேவையான குளிர் சாதனம், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வேகமாக வெப்பமயமாகிவரும் உலகை மேலும் வெப்பமயமாகாமல் தடுக்க உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.  முன்னணி கணினி நிறுவனங்களும் தற்சார்பு முறையில் இயங்கும் தரவு மையங்களுக்கான (sustainable data centers ) ஆராய்ச்சி செய்து வருகின்றன.  அம்மாதிரியான ஆராய்ச்சியில் தான் அமெரிக்காவில் இருக்கும் HP லாப்ஸ் இவ்வாறு கண்டறிந்திருக்கிறது.

10000 மாடுகளைக் கொண்ட ஒரு பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து ஒரு மெகா வாட் திறன் கொண்ட தரவு மையத்தை தற்சார்பு முறையில் இயக்கலாம் என்கிறார்கள் HP லாப்ஸ் விஞ்ஞானிகள்.   தரவு மையத்திலிருந்து வெளி வரும் வெப்பத்தை பயன் படுத்தி பண்ணை கழிவுகளை சிதைத்து வரும் மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தினால் தரவு மையத்தை தற்சார்பு முறையில் இயக்கலாம் என்று சொல்கிறார்கள். இதனால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் பெரிதும் குறைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இது எப்படி இயங்குகிறது என்று மேலும் புரிந்துகொள்ள கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.


இந்தியாவின் வளர்ச்சிக்கு அதன் கிராமங்கள் தான் முதுகெலும்பு என்றார் காந்திஜி. நாம் தான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ  என்று நினைக்கிறேன். எதிர் காலத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பால் பண்ணை, அதை சார்ந்த கணினி தரவு மையம் என்று நினைத்துப்பார்த்தால் அதன் சாத்தியங்கள் மலைக்க வைக்கிறது.  அவ்வாறு நினைக்கும் பொழுது பசுக்களை பெரிதும் நேசிக்கும் நம்முடைய 'பசுநேசன்' ராமராஜனும், லாலு பிரசாத் யாதவ்வும்  hp போன்ற தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளுக்குத்  தலைவராகும் விபரீத சாத்தியமும் தென்படுவது நம்முடைய பாக்கியமா என்றால் சொல்லத் தெரியவில்லை. 



********************************************


அட்டையை தவிர்த்துவிட்டு படித்தால் பெரும்பாலான  பத்திரிகைகள் குமுதம் போலவே இருக்கிறது என்று சில வருடங்களுக்கு  முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கிறது.  இப்போது அட்டையை தவிர்த்துவிட்டு படித்தால் பெரும்பாலான  பத்திரிகைகள் "முரசொலி" போலவே இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Sunday, April 11, 2010

கத்திரிக்காய் கசக்குதய்யா

காதலாவது கத்திரிக்காயாவது என்று ஒரு சொலவடை நம்மிடையே புழக்கத்திலிருக்கிறது.  கொஞ்சம் யோசித்தால், இக்காலத்தில் காதலால் ஏறக்குறைய ஒரு பிரச்சனையும் இல்லை என்றே சொல்லலாம்.  இப்போது பிரச்சனை எல்லாம்  கத்திரிக்காயால் தான்.

ஆமாம்.  நீங்கள் நினைப்பது சரிதான். 

மரபணு மாற்றப்பட்ட BT கத்திரிக்காய் தான்.

ஆனால்,  BT  கத்திரிக்காய் பற்றியோ அதன் சாதக(?) பாதகங்களைப் பற்றியோ இங்கு நான் பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அது பற்றி படிக்க விருப்பமிருப்பவர்கள் சுஜாதா தேசிகனின் வலைப்பூவில் படிக்கலாம்.  லிங்க் இதோ!
http://solvanam.com/?p=6484

நான் சொல்ல விழைவதெல்லாம் இந்த BT கத்திரிக்காயால் என் போன்ற கத்திரிக்காய் ரசிகர்களுக்கு நேர்ந்திருக்கும் சங்கடங்களைப் பற்றித்தான்.

ஆழ்ந்த வயலட் கலரில் (கத்திரிக்காய் கலர்?) வெள்ளை வரிகளுடனோ அல்லது வரி இல்லாமலோ பச்சை கிரீடத்துடன் குப்பலாய் கடையில் கூடையில் பிஞ்சுக் கத்திரிக்காய்கள் குவிந்திருக்கும் உள்ளம் கொள்ளை கொள்ளும் காட்சியே தனி அழகுதான். 

பிஞ்சுக் கத்திரிக்காய் தான் எத்தனை அழகு?


திண்மையும் மென்மையும் கொண்ட உடல், பள பளக்கும் தோல், பெண்களின் காதோரம் வழிந்தொழுகும் சிறிய முடிக்கற்றைப போல அமைந்திருக்கும் பச்சை கிரீடத்தின் அமைப்பு, நவ யுவதிகளின் காது மாட்டல் போல வளைந்திருக்கும் காம்பு, கணுக்காலுக்கு மேலே வெளிப்படுவதைப்போல பிஞ்சுக் கத்திரிக்காயை நறுக்கினால் வெளிப்படும் பளீர் வெளுப்பு...

ஒரு இளம் பெண்ணின் அழகுக்கு சற்றும் குறைவானதல்ல பிஞ்சுக் கத்திரிக்காயின் அழகு என்பது என் அபிப்ராயம்.

அழகு இப்படியென்றால், அதன் சுவை..

நினைக்கும் பொழுதே  நாவினில் சுவைநீர்களின் குற்றாலப் பிரவாஹம்...

நல்ல பொடியான பிஞ்சுக் கத்திரிக்காய்களை காம்பை மட்டும் நீக்கி, நான்காய் கீறிப் பிளந்து மசாலா பொடி திணித்து நிறைய எண்ணெய் விட்டு, அந்த எண்ணையிலேயே வெந்த "எண்ணைக் கத்திரிக்காய்";
நீளவாக்கில் அரிந்து சிம்பிளாய் வெறும் வரமிளகாய் சீரகம் மற்றும் காயம் தாளித்து கமகமவென்று கத்திரிக்காயின் வாசத்துடன் காயம் சேர்ந்து மணக்கும் எண்ணெய் வதக்கல்;
ஆந்திரா ஸ்டைல் ரசவாங்கி;
கருப்பு கொத்துக்கடலை சேர்த்து கருவடாம் தாளித்து செய்யப்படும் கத்திரிக்காய் கூட்டு;
சற்றே பெரிய சைஸ் கத்திரிக்காய்களை தணலில் சுட்டு உரித்து மசித்து காயம் மற்றும் வரமிளகாய் தாளித்து தன் நீரிலேயே வெந்த கத்திரிக்காயின் மணத்துடன்  செய்யப்படும் துவையல்;
இதையே தக்காளி வெங்காயம் மசாலா சேர்த்து செய்யப்படும் வடநாட்டு "பைங்கன் பர்த்தா";
சுட்டு மசித்த கத்திரிக்காய்களை வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய்களை சேர்த்து கொஞ்சம் தூக்கலாய் புளிக்கூட்டி செய்யப்படும் பொங்கல் மற்றும் இட்லிக்கு ஏர்வையான கொத்சு;
வெங்காயம், கொத்தமல்லி மசாலா மணக்கும் கத்திரிக்காய் சாதம் "வாங்கிபாத்"...

ம்ம்ம்ம்...

விவரிக்கும் போதே மேலே தொடரமுடியாமல் சுவைநீர் வழிந்து சட்டை நனைந்தாகிவிட்டது.

இப்படி, "எத்துணைக் கோடி கத்தரிக்காய் கறிகள் வைத்தாய் இறைவா" என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு ரசிகன். இந்தமாதிரி வெறித்தனமாய் நான்மட்டும் தனியாளாய் இல்லை என்று நினைக்கிறேன்.

இப்படி கத்திரிக்காயுடன் காதலாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் வில்லனாய் நுழைந்திருக்கிறது BT கத்திரிக்காய். (அசல் வில்லன் அதை அறிமுகப்படுத்தியிருக்கும் மான்சாண்டோ எனப்படும் அமெரிக்க பன்னாட்டு பூச்சிக்கொல்லி மற்றும் விதை நிறுவனம் தான்)

அரசாங்கம் இது சம்பந்தமாய் தற்காலிகமாய் தடை விதித்திருந்தாலும் நம் நாட்டில் அதையெல்லாம் மீறி புழக்கத்தில் வர ஏராளமாய் வழிகளிருக்கின்றன.

அதனால், முன்பு காதலுடன் பார்த்த கத்திரிக்காய்களை இப்பொழுது சற்று கிலியுடன் தான் பார்க்க முடிகிறது.  
BT கத்திரிக்காய் பற்றி அறிந்தவன் கண்களுக்கு எல்லா கத்திரிக்காயும் பேயாய் தெரிகிறது.  முன்பு இதே கத்திரிக்காய்தான்  பெண்ணாய் தெரிந்தது!!

(அதெப்படி, பெண்ணும் பேயும் எப்போதும் சேர்ந்தே வருகிறது?  பிரித்தே பார்க்க முடியாமல் அப்படி அவர்களுக்குளே என்ன சம்பந்தம்?)

காசியாத்திரை சென்றால் மிகவும் பிடித்தமான காய், கனி வகைகளில் ஒன்றை விட்டுவிட்டு வருவது மரபு.  வயதான பின்பு நான் காசியாத்திரை போகும் பொழுது  கத்திரிக்காயை விட்டு விட்டு வரலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது  வெகு சீக்கிரமே காசியாத்திரை போவது  என்று முடிவெடுத்து விட்டேன்.

பி.கு.: BT கத்திரிக்காய் வருவதற்கு ஆதரவாய் ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு குடிப்பதற்கு பூச்சிகொல்லி காக்டைலும் DDT தூவப்பட்ட உணவும் சாப்பிடுவதற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு வாசகர் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெசில் கடிதம் எழுதியிருந்தது அதில் வெளிப்படும் தார்மீக கோபத்தை தாண்டி ரசிக்கத்தக்கதாயிருக்கிறது.

Friday, April 9, 2010

From my Archives - I

போன வாரம் எதையோ தேடப்போய் லாப்டை குடைந்துக்கொண்டிருந்ததில் சுமார் 8 -10 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதி வைத்திருந்த நோட்பேட் ஒன்று சிக்கியது.  தேடுவதை மறந்து அதை புரட்டிப்பார்த்ததில் அக்காலத்தில் நான் எழுதிவைத்தவை அதிலிருந்தது.  அந்த ஆர்கைவ்சிலிருந்து ஒன்று உங்கள் பார்வைக்கு.. எடிட் செய்யப்படாமலேயே..

பின்புலம்:
அப்போது வலைப்பதிவு இருக்கவில்லையோ அல்லது நான் பரிச்சயமில்லாமல் இருந்தேனோ தெரியவில்லை. ஒரு தனிச்சுற்று சிற்றிதழ்  pdf பார்மெட்டில் சுமார் நான்கைந்து பக்கங்களுக்கு தயார் செய்து ஈமெயில் மூலம் விநியோகம் செய்யலாம் என்று உத்தேசித்திருந்தேன்.  அது வெறும் உத்தேசமாகவே முடிந்து  விட்டது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.  அதற்காக நான் எழுதிய முன்னுரை இது.

"இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்று நேரடியாக ஆரம்பிக்க ஆசை தான். ஆனால் நீங்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேணுமே...

எதற்கு இவ்வளவு பீடிகை?

என்ன ஆசை?

நீங்கள் எல்லோரும் தினமும் செய்தித்தாள் படிக்கிறீர்களா? வார மற்றும் மாத சஞ்சிகைகளை படிக்கிறீர்களா?

ஒன்று கவனித்திருப்பீர்களே!!

"இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது"

இப்போது பேனா பிடித்தவனையும் இந்த வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்.

சரி. யாரெல்லாம் பேனா பிடிக்கிறார்கள்?

மிஸ். அமிஞ்சிக்கரை, சின்னத்திரையில் 'டமில் பேஸும்' குட்டை பாவாடைப் பெண், சமீபத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர், தனக்குத்தானே பல்வேறு பட்டம் சூட்டிக் கொண்டவர், 'சோஷியலைட்டுகள்' (இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது புரிய வைத்தால் அவர் சென்னைவாசியாக இருக்கும் பட்சத்தில் தினமும் ஒரு வேளை குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.), தொழிலதிபர்களின் மனைவிகள், ஓய்வுப் பெற்று வீட்டில் சும்மா இருக்கும் அரசு அதிகாரிகள், பரபரப்பான வழக்கில் தண்டனைக்குள்ளான குற்றவாளிகள்...

இப்படி பட்டியல் தண்ணீர்குட வரிசையாய் நீண்டுகொண்டே போகிறது...

இவர்களுக்கெல்லாம் என்ன தகுதி?

பிராபல்யம்?
அனுபவம்?
மொழி அறிவு?
புலமை?
தொழில் வித்தகம்?

இம்மாதிரி ஏதாவது காரணங்கள் இருப்பினும், எதோ குறைவு இருப்பதாகவே படுகிறது.

இப்போது ஊகித்திருப்பீர்களே!!

ஆமாம்.  மாதம் இருமுறையோ, மாதா மாதமோ என் எண்ணங்களை (ஒரு சின்ன வட்டத்திற்கு) பகிர்ந்து கொள்ளலாம் என்று உத்தேசித்துள்ளேன்.  தினசரிகளில் வரும் சின்டிகேடட் பீச்சர்ஸ் மாதிரி, "கற்றதும் பெற்றதும்" மாதிரி...

என்ன, ரெடியா?

ரெடியில்லாதவர்கள் 'இது தேவையில்லை' என்று விண்ணப்பித்தால் அடுத்த முறை அனுப்பப்பட மாட்டாது.  அம்மாதிரி விண்ணப்பிக்கிறவர்களை ஒசாமா பின் லேடன் கடத்தட்டும்.

Monday, March 1, 2010

லொள்ளு பக்தி

பக்தியில் எத்தனையோ வகை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்...

சத்யராஜ் ஸ்டைல் பக்தி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அதாங்க... லொள்ளு பக்தி!!
சமஸ்க்ரிதத்தில் "நிந்தா ஸ்துதி" என வழங்குவதை தற்க்காலதிர்கேற்ப "லொள்ளு செய்து பக்தி செய்தல்" என்று தமிழ்ப்படுத்தலாம் சாரி...தமில் படுத்தலாம் தானே?

இரண்டு தமிழ்ப்புலவர்கள். ஒருவர் நொண்டி. மற்றவர் குருடு.
இருவரும் பாடி பரிசில் பெற்று காட்டுவழியே வருகையில் இருட்டி விட்டது. இரவைக் கழிக்க அங்கிருந்த பிள்ளையார் கோவிலில் தங்கினார்கள்.  இவர்களைப் பின்தொடர்ந்த திருடன் அவர்கள் தூங்கும் பொழுது பரிசிலை திருடிக்கொண்டு கோவிலிலேயே மறைந்திருந்தான்.

புலவரிருவரும் பொருள் களவு போனதை அறிந்து பிள்ளையாரைப் பார்த்து இவ்வாறு பாடினர்.

தம்பியோ பெண் திருடி
தாயாருடன் பிறந்த வம்பனோ
நெய் திருடும் மாயன்
அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவித்தீர்
போமோ கோத்திரத்துக்குள்ள குணம்.

இதைக்கேட்ட பிள்ளையார் பக்தனான திருடன் நம்மால் பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதே என வருந்தி அந்த புலவர்களிடம் மன்னிப்புக் கோரி அவரது பொருளை ஒப்படைத்தானாம்.

அதே மாதிரி இன்னொரு புலவர் (இவர் சம்ஸ்க்ருதம்) பிள்ளையாரை நோக்கி
"பூமிக்கு தலைவனை அண்டினால் பூமியை கொடுப்பார்கள்
பணத்திற்கு தலைவனை அண்டினால் பணத்தை கொடுப்பார்கள்
விக்னேஸ்வரனான உன்னை அண்டினால் விக்னத்தை அல்லவா கொடுப்பாய்
உன்னை என் பக்கமே வராதே என்று ஆயிரம் முறை நமஸ்கரிக்கிறேன்"
என்று பொருள்பட பாடியிருக்கிறார்.

இந்த இரண்டு லொள்ளிலும் பிள்ளையாரே மாட்டியிருக்கிறாரே!! மற்ற கடவுளெல்லாம் ரொம்ப கோபக்காரர்களோ?

பி.கு: மற்ற  கடவுளைப் பற்றி இம்மாதிரி "லொள்ளு" இருந்தால் தெரியப்படுதுங்களேன். இவ்வலைப்பூவில் பிரசுரிக்கலாம்.

Wednesday, February 3, 2010

ஒரு சேவை.. ஒரு ஆராய்ச்சி..

ஒரு மதியம் அலுவலகத்தில் சாவகாசமாய் வலை உலவிக்கொண்டிருக்கையில் ஒரு செய்தியை பார்த்தவுடன் ஏறத்தாழ சேரிலிருந்து கீழே விழ நேர்ந்தது.

பெண்களின் மார்பகங்களை உற்று நோக்குவதால் ஆண்களுக்கு நீள்கிறது.. ஆயுள்  என்கிறது ஒரு மேலைநாட்டு ஆராய்ச்சி.

மார்பகங்களை குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் உற்று நோக்கி ஜோள்ளுவதால்   ஆண்களின் ஆயுள் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பெருகிறதாம்.

அடடா.. அடடா...அபாரம்...
புல்லரிக்கிறது...
எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள்...
ஆராய்ச்சி என்றால் இதுவல்லவோ?

பாவம் பெண்கள். ஆயுள் நீள்வதற்கு அவர்கள் எதை உற்று நோக்குவார்கள்? ஒருவேளை அதற்கும் ஆராய்ச்சி நடக்கிறதோ என்னமோ? காத்திருப்போம்.

கல்யாணமான ஆண்களின் உயிரை அவரின் மனைவிமார்களாகிய (இந்த செய்தி படித்ததிலிரிந்து வார்த்தைகளெல்லாம் எப்படி வருகிறது பாருங்கள்..) பெண்மணிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிடுங்கி எடுப்பதால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்ய அவர்கள் மூலமாகவே ஒரு தீர்வையும் அளித்து...அடடா..அடடா.. என்ன ஒரு பொயடிக் ஜஸ்டிஸ்... இயற்கையின் கருணையே கருணை...

இப்போது ஒரு உண்மை புலப்படுகிறது..
நம் வெகு ஜன பத்திரிகைகள் இந்த சேவை நோக்கில் தான் நடிகைகளின் ஏறக்குறைய திறந்த மார்பகங்களின் படங்களை ஏராளமாக வெளியிடுகிறது.  not to attact eyeballs. என்னே அவர்களின் தீர்கதரிசனம்?  அவைகளின் உயரிய இச்சேவையை உண்மை தெரியாமல் நாம் தான் இத்தனை காலமாய் தவறாய் குறை சொல்லிக் கொண்டிரிந்திருக்கிறோம்..
இம்மாதிரியான ஒரு மகத்தான சேவையை பாராட்ட மனமில்லாவிட்டாலும் இனிமேலாவது மனம் திருந்தி விமர்சிக்காமல் இருக்கலாமே. அவ்வாறு விமர்சித்தவர்கள் இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ? பேசாமல் தீர்த்த யாத்திரை கிளம்பி இந்த பஞ்சமஹா பாதகத்தை போக்கிகொள்ளுவதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.
இதே சேவை தான் தொலைகாட்சிகளிலும் "மானாட மயிலாட", "ஜோடி நம்பர் 1 , ராணி ஆறு ராஜா யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்களின் அடிநாதமும்  என்று சொல்ல தேவையே இல்லை. இது செய்தி நாளேடுகளின் page 3 பக்கங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆராய்ச்சி தகவலை வெளியிட்டது  இம்மாதிரி page 3 கலாச்சாரத்திற்கு வித்திட்ட முன்னோடியான "The Times of India" தான் என்பது ஆச்சர்யம் அளிக்கவில்லை.

படிக்க க்ளிக்கவும்:
http://timesofindia.indiatimes.com/life/health-fitness/health/Stare-at-boobs-to-live-longer/articleshow/5304136.cms