இந்த தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ரஜினியின் பாபா முத்திரை, படையப்பாவின் "என் வழி தனீ வழீ...." என்ற விரலசைப்பு, பாட்சாவின் "ஒரு தரம் சொன்னா... நூறு தரம் சொன்ன மாதிரி..." போன்ற வசனங்களுக்கு செய்த விரலசைப்புகள், மற்றும் இன்ன பிற சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ் துரத்துபவர்களான விஜய்யின் அறை மனது காப்பியும் மற்றும் சிம்புவின் அப்பட்டமான காப்பிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் நிச்சயமாக தமிழ் கூறும் நல்லுலகர் என்று உறுதி படுத்திக் கொள்ளலாம்.
நோக்கம் அதுவல்லவேனினும், you are not way off the mark.
விரல்களைப் பயன்படுத்தி செய்யும் கலைகள் அல்லது கை-வேலைகள் எல்லாவற்றையுமே விரல் வித்தை எனலாம் எனினும் ஆழ்ந்து நோக்கின் ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்ற நுண்கலைகள் மற்றும் அக்க்யு ப்ரெஷர், வர்மக் கலை போன்றவை விரல் வித்தை எனக் கொள்ள கூடுதல் தகுதி பெறுகிறது. இருப்பினும், முத்ரா எனப்படும் முத்திரைகள் (அதாவது விரல்களால் செய்யப்படும் விதம் விதமான போஸ்கள்) சிறப்பு தகுதி பெற்று விரல் வித்தை என்னும் சொற்றொடர்க்கு தகுதி பெறுகிறது என்று கூறலாம்.
இவ்விதமான முத்திரைகளை நாம் அறிந்தும் அறியாமலும் (சினிமா அல்ல) தெரிந்தும் தெரியாமலும் நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுத்தபடுகிறது என்பதை முத்ரா விதானம் என்னும் முத்திரைகளைப் பற்றி விளக்கும் புத்தகத்தைப் படிக்கும் பொழுது ஆச்சரியம் எழுவது தவிர்க்க முடியவில்லை.
நாட்டிய முத்திரைகள் பற்றி அவ்வளவாக கூறப்படாத இப்புத்தகத்தில் இடம் பெரும் முத்திரைகள் பெரும்பாலும் யோக மற்றும் ஆன்மீக சம்பந்தமானவையே. முத்ரா விதானத்தில் இடம் பெரும் முத்திரைகள் ஜபம் மற்றும் பூஜை, ஹோமங்களில் பயன்படுத்தப் படும் ந்யாச முத்ரா, அர்க்யஸ்தாபந முத்ரா, ஆவாஹநாதி முத்ரா, ஹோம முத்ரா, நிவேதன முத்ரா என வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.
சக்தி விகடன், குமுதம் பக்தி முதலான இன்ன பிற ஆன்மீக வார மாத சஞ்சிகைகளை படிப்பவர்கள் கண்டிப்பாக அபய மற்றும் வரத முத்திரைகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். இருகை கூப்பி பெரியவர்களையோ கடவுளையோ வணங்கும் போது நாம் பயன்படுத்துவது வந்தனீ முத்திரை.
நாம் குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்ட சுவரில் நிழலுருவில் விரல்களைக் கொண்டு அசைத்து மான் அல்லது நாய் மாதிரி காண்பித்து செய்யப்படுவது ம்ருகீ முத்திரை. பறவை பறப்பது அல்லது மீன் நீந்துவது மாதிரி செய்து காண்பிப்பது மத்ஸ்ய முத்திரை.
உலக அழகிப் போட்டியில் வலது கையை இடது பக்க மார்பில் வைத்துக் கொண்டு சதா பிளாஸ்டிக் புன்னகைக்கும் ஒல்லிப் பிச்சான் அழகிகள் செய்வது ஹ்ருதய முத்திரை.
சினிமாவில் கதாநாயகியை வில்லன் தகாத எண்ணத்தோடு நெருங்குகையில் மார்பின் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வீரிடும்போது செய்யப்படுவது கவச முத்திரை.
இவ்வாறாக நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முத்திரைகள் 'ஹேன்ட் ஜெஸ்சர்ஸ்' அல்லது பொதுவாக 'பாடி லாங்குவேஜ்' என்று தற்காலத்தில் வழங்கப்படுகிறது. எந்தெந்த மாதிரியான சூழ்நிலைகளில் எந்தெந்த ஜெஸ்சர்ஸ் பயன்படுத்தப் பட வேண்டும் அல்லது பயன் படும் என்று விளக்கும் 'பாடி லாங்குவேஜ்' பற்றிய நவீன புத்தகங்களும், கட்டுரைகளும் என்று ஏராளமாக காணக் கிடைக்கிறது. இம்மாதிரியான நூல்களுக்கெல்லாம் முன்னோடி என்று முத்ரா விதானத்தைக் கொண்டால் தப்பில்லை என்றே படுகிறது.
உதாரணமாக, கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் 'தம்ஸ் அப்' ஸைன் ஒரு பாஸிடிவ்வான ஜெஸ்சராக கருதபபடிகிறது. இந்த 'தம்ஸ் அப்' ஸைநை இருகைகளையும் கொண்டு தசாவதாரத்தில் பாட்டி வேடமிட்ட கமல் தோல் பொம்மைகள் தீயில் பொசுங்கி போன சூழலில் அசினை நோக்கி செய்தது போல செய்தால் அது த்ரைலோக்ய ஸம்மோஹினீ எனப்படும் முத்திரை என்கிறது முத்ரா விதானம். கொஞ்சம் ஆழ்ந்து நோக்கின் இந்த த்ரைலோக்ய ஸம்மோஹினீ என்ற பெயரிற்க்கும் 'தம்ஸ் அப்' ஜெஸ்சரிந் பாஸிடிவ்வான கன்னடேஷனுக்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.
மற்றபடி இந்த முத்ரா விதானம் என்பது முத்ரா விக்யான் (science of mudras) என்றும் ஐந்து விரல்களும் பஞ்ச பூத தத்துவங்கள் என்று தொடங்கி விரல்களின் நுனியில் வெளிப்படும் சக்தி மின்னூட்டம் எவ்வாறு முத்திரைகளால் சீரமைக்கப்பெற்று உடல் பலப்படுகிறது அல்லது உடல் உபாதைகள் குணமாகிறது என்பது வரை ஏராளமான விளக்கங்கள், விஷயங்கள் வலையில் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கும் போது இதுவும் ஜோசியம் போன்று ஒரு ஸ்யூடோ சயன்ஸ் எனக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, சூன்ய முத்திரையை பயன் படுத்தி செல்பேசி செவிடான காதுகளின் கேட்கும் திறனை திரும்பப் பெறலாம் என்பது தற்காலத்திற்கு ஏற்ற செலவில்லாத, மருந்தில்லாத தீர்வாக கவர்ச்சி காட்டுகிறது.
நிற்க.
இம்மாதிரியான முத்திரைகளினால் பயன்பெற வேண்டும் என நினைப்பவர்கள் இது பற்றி நன்கு அறிந்த மற்றும் தகுந்த பயிற்சி உடையவர்களின் துணை கொண்டு இதில் ஈடுபடுவது சாலச் சிறந்தது. ஏனெனில், 'ம்ருகீ' முத்திரையை தவறாக பயன்படுத்தியதால்தான் "பாபா" படம் ரஜினிக்கு தோல்விப் படமாயிற்று என விஷயம் அறிந்தவர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ள இயலவில்லை.
ஆவல் மேலிட, பாடல் ஒளிபரப்புவதற்கு முன்னால் தொ. கா. தொகுப்பாளினிகள் செய்யும் விதம் விதமான விரல் வித்தைகள் முத்ரா விதானத்தில் அடங்குமா என இது பற்றி நன்கு அறிந்த என் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கேட்டதில், அதெல்லாம் "சேஷ்டா" விதானத்தில் தான் அடங்கும் என்கிறார்.
சேஷன்
9 years ago