Wednesday, May 6, 2009

நான் கடவுள்

எச்சரிக்கை: இந்த தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் இதை பாலாவின் "நான் கடவுள்" பற்றிய மற்றுமொரு வலைப்பதிவு என்று நினைப்பீர்களானால் நீங்கள் இத்துடன் நிறுத்திவிட்டு படிக்காமல் விலகிக்கொள்வது நல்லது. அப்படி விலகாமல் உங்கள் சொந்த ரிஸ்கில் இதை படிக்கத்தொடர்வீர்களானால் நான் பொறுப்பாளி அல்ல.

நீங்கள் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?

கல்கியின் முத்திரைப்படைப்பு அவரின் வசீகர தெள்ளிய நடை, பாத்திரப்படைப்பு இவை எல்லாம் காலை சாப்பிட்ட முதல் டிகாக்ஷன் காபி சுவைபோல நினைக்குந்தோறும் மனதில் மணம் பரப்பும்மே!

அதில் உங்களுக்கு வந்தியத்தேவன், ராஜராஜன், குந்தவை போன்ற மெயின் கதாபாத்திரங்களுள் யாராவது ஒருவரோ அல்லது எல்லோருமோ உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாயிருக்கக்கூடும்.

அக்கதையில், இவர்களுக்கு இணையாக கதை முழுவதும், ரஜனி படத்தில் செந்தில் மாதிரி, வரும் ஆழ்வார்கடியானை நினைவிருக்கிறதா?

எப்படி மறக்க முடியும்? உடல் முழுதும் வைணவத் திருச்சின்னங்களும் கையில் குண்டாந்தடியுமாய் கல்கி அவரை படைத்து கதை நகர்த்தியது மறக்கக் கூடியதா?

அவர் ஒரு தீவிரt வைணவர். அந்த பற்றினால் சைவத்தையும் சிவனையும் எள்ளி நகையாடுவார். கல்கியின் வரிகளில் அவரது நகையாடல்களில் ரசமிருக்கும். படிப்பவரை புன்முறுவலுடன் ரசிக்க வைக்கும்.

அதே சமயம், விஷ்ணுவை மற்றவர் குறைவாய் பேசும் போது அவர் கொள்ளும் ஆவேசம் நம்மை பதைபதைக்கச் செய்யும்.

அவர் கடவுள் விஷ்ணு. அவர் தான் பெரியவர். அவர் தான் கடவுள்.

அதே போல் வீரசைவர்களுக்கு சிவன் தான் கடவுள். அவர் தான் பெரியவர். அவர் தான் கடவுள்.

"அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயிலே மண்ணு..."

"அவரவர் கடவுளர் குறைவிலர்..."

"சிவா விஷ்ணு அபேதம்"

இப்படியெல்லாம் சொல்லப்படிருதாலும் "என் கடவுள் தான் பெரியவர்/சிறந்தவர்" போக்கு நம் சமுதாயத்தில் வேறோடியிருப்பது கண்கூடு.

இதே கருத்து நாத்திகம் பேசும் கமலின் தசாவதாரத்தில் மிகைபடுத்தப்பட்டிருந்தாலும், காலம் காலமாய் மக்களின் sub-consciousல் ஆழப் பதிந்திருப்பத்தின் வெளிப்பாடே அது என்று உணர்த்துகிறது.

இது எதோ இந்து மதத்தில் தான் என்றில்லை; உலகலாவியது.

இஸ்லாமியர்கள் மற்றவர்களை காபிர்ஸ் (kafirs) என்றும் கிறிஸ்தவர்கள் பகன்ஸ் (pagans) என்று வழங்குவதும் இதை உறுதிப்படுத்தும்.

இது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

காரணம் இருக்கிறதா?

இருக்கவேண்டுமே!

வேதாந்தம் விடை தருகிறது.

"தத் தவம் அசி..." "அஹம் ப்ரமாஸ்மி..."

வேறு வேறல்ல...

எல்லாமே ஒன்று தான்.

ஆம். அத்வைதம் தான் காரணம்.

வியப்பாயிருகிறதல்லவா?

கடவுளை பலர் பலவாறு விவரித்திருக்கிறார்கள்...

ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதி...என்று மாணிக்கவாசகர் திருவாசகமாய் அருளியதை உருவகப்படுத்திப் பார்க்க கொஞ்சம் ச்ரமப்படத்தான் வேண்டியிருக்கிறது...

முக்காலமும் நீ; அதையும் தாண்டி காலத்தை கடந்தவனும் நீ...

முக்குணமும் நீ; அதையும் தாண்டி நிற்குணமாய் இருப்பவனும் நீ...

முச்சக்தியும் நீ; அதையும் தாண்டி சிவமாய் இருப்பவனும் நீ...

நீயே பிரும்மா...

நீயே விஷ்ணு...

நீயே சிவன்...

நீயே இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, நிலம், நீர், காற்று, ஆகாயம்.....

நீயே எல்லாமும்...

இவ்வாறு பொது குணங்களால் போற்றப்படுகிறது....

இது சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் கூறப்பட்டிருக்கிறது...

ஏன்... எந்த கடவுளானாலும் இப்படி போற்றப்படிருக்கின்றது.

ம்ம்...

அப்படியானால் யார் பெரியவர்?

"அலகிலா விளையாட்டுடையான்..." என்பதற்கேற்ப பரப்ரும்மம் சங்கல்பித்துக்கொண்டு விளையாட்டாய் பிரபஞ்சத்தைப் படைத்து முத்தொழில் புரிய முக்கடவுளையும் படைத்தது...

அத்வைதம், எல்லோரும் அந்த ப்ரும்மமே அல்லது பிரும்மத்தின் ஸ்வரூபமே என்கிறது.

அப்படியானால், பிரம்மா விஷ்ணு சிவன் எல்லோரும் அந்த ultimate ஆன பிரும்மம் தானே...

அப்படியானால், அந்த ultimate பிரம்மத்தின் சிறப்புகள், குணாதிசயங்கள் எல்லாம் இவர்களுக்கானது என்று சொல்வதில் தவறில்லையே...

விஷ்ணுவை பிரும்மம் என்று பார்த்தால் அவர்தான் ultimate... சிவனைப்பர்த்தால் அவர் தான் ultimate...

ultimate ஆன பிரும்மத்தின்

ஸ்வரூபம் எல்லோர் மீதும் ஏற்றி கூறப்பட்டிருப்பதால் ஒன்றை மற்றும் தனியாய் பார்ப்பவர்க்கு அவர் தான் ultimate என்று படுவதில் தவறில்லையே...

இந்த லாஜிக்கை கொஞ்சம் விஸ்தாரப்படுதினால்....

அல்லா தான் ..., யேசுதான்..., உலகநாதன் தான்...., மாடசாமி தான்...

நீ தான்..., நான் தான்... ultimate....

உலகநாதன், மாடசாமி, நீ, நான் மற்றெல்லாரும் பிரும்மம்...

எல்லாமே பிரும்மம்.

இதை உணர்ந்த நிலையில்,

வைஷ்ணவன் இல்லை; அவனே விஷ்ணு....

சைவன்இல்லை ; அவனே சிவன்...

இஸ்லாமியன் இல்லை; அவனே அல்லா...

கிறிஸ்தவன் இல்லை; அவனே கிறிஸ்து...

என் கடவுள் இல்லை; நான் கடவுள்...

நானே கடவுள்...

இதைத்தான் ஓஷோ,

கிறிஸ்தவனாய் இராதே, நீயே க்ரிஸ்துவாகு; புத்த மதத்தவனாய் இராதே, நீயே புத்தனாகு என்கிறார். எத்துணை சத்தியமான வாக்கியம்?

"கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்"

ஏனென்றால், கண்டவர் கண்ட பொருளாய் ஆகிவிடுவதால் விண்டுவதற்கு யாருளர் ?

எனவே, காணும் வரையில் இது போன்று விண்டுகொண்டிருப்போம்.

பி.கு.: இந்த வலைப்பதிவு என் குருஜிக்கு சமர்ப்பணம். எனென்றால், போறபோக்கில் எளிமையாய் ஒரே வரியில் அவர் கூறியதைப் பற்றி சிந்தித்து விவரித்து எழுதப்பட்டதே இந்த வலைப்பதிவு. இந்த வலைப்பதிவில் எதாவது தவறிருக்குமாயின் அது என்னுடையதே.