Saturday, April 11, 2009

நியூஸ் பேப்பர் - பார்ட் II

தகவலறியும் பசி, ஆவல், வெறி, வேட்கை, .... எப்படித்தான் விவரிப்பது??

"தகவலறியும்" கூட சரிதானா ??

"அறியும்" போதும் என்று நினைக்கத்தோன்றுகிறது...

எதுவாயினும், அவருடைய அறியும் பசி, அகோர பகாசுர ஜடராக்னி..

அந்த அக்னியில் அத்தனையும் ஆஹுதி..

ந்யூஸ் பேப்பர், வார-மாத புத்தகங்கள், ஸ்லோக புத்தகங்கள், கல்யாண பத்திரிகைகள், பக்கோடா-கடலை மடித்த காகிதம், பஸ் டிக்கட்டுகள், பிட் நோட்டீஸ், வால் போஸ்டர்கள், இன்ன பிற மற்றும் எதுவாயினும்...

ஸ்வாஹாஹா....

நெய் ஊற்ற ஹோமாக்னி அணையுமோ?

மேலும் மேலும் கொழுந்து விட்டு தாண்டவமாடி வளர்ந்து ...

மேலும் மேலும் நெய் ஊற்ற...

ஸ்வாஹாஹா.....

ஸ்வாஹாஹா...

ஆஹுதியாகும் எல்லாவற்றையும் ஜீரணித்து தூய பொன்னிறமாய் ஜக ஜகவென்று...

ப்ரகாஸிப்பது ஹோமாக்னியா? அறிவா?

இரண்டும் வேறு வேறா?

விவரிக்க வார்த்தையில்லை என்பதை விட அந்த முயற்சியில் தோல்வி என்பது பொய் கலப்பில்லாதது.

வந்த பேப்பரை யாரும் முதலில் எடுத்துவிட முடியாது. அது அவரது உரிமை.

டீக்கடையில் பழகிய மனிதர் வாங்கிப் போடும் பொறைக்காக வாலாட்டிக் காத்திருக்கும் நாயின் நிலை தான் என் நிலை.

பேப்பர் வந்தவுடன் தான் எத்தனை மரியாதைகள் அதற்க்கு சில வீடுகளில்.

ஏடாகப் பிரியாமல் இருக்க ஸ்டேப்ளர் பின் குத்து...

கோணி ஊசி கொண்டு ட்வைன் நூல் காதணி விழா சில வீட்டில்...

அதோடு நில்லாமல் வீட்டு நம்பரோ உரிமையாளர் பெயரோ பொறிக்கப்பட்டு களவு போகாமல் இருக்க/ களவு போனால் அடையாளம் காண என்று ஜோடனைகள் வேறு...

மதியத்திற்கு மேல் ஆயுள் காலாவதியாகும் வஸ்துவிற்குத்தான் உபசாரம் எத்தனை....

உபசாரம்தான் இத்தனை விதம் என்றால் அதை உபயோகிப்பதிலும்தான் எத்தனை விதம்...

முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை படிப்பார் சிலர்...

வேறு சிலர், அப்படியே தலைகீழாய் கடைசி பக்கம் ஆரம்பித்து முதலில் முடிப்பார்.

இன்னும் சிலர், அவரவர் அபிமான பக்கத்தில் ஆரம்பித்து (பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் பக்கம்) பின் மற்ற பக்கங்கட்க்கு செல்வர்.

வெறும் ஹெட்லைன்ஸ், போட்டோ மட்டும் சிலர் பார்ப்பதுண்டு.

பேப்பரையே பைவ் கோர்ஸ் மீல்ஸ் மாதிரி படிப்பவர் உண்டு. appetizer மாதிரி முதல் ரவுண்டில் ஹெட்லைன்ஸ் தொடங்கி, படிப் படியாய் முன்னேறுவார்கள்.

முதலில் ஹெட்லைன்ஸ் மற்றும் முக்கியமான செய்திகளை நோட்டம் விட்டு, பின்பு மதியம் சாவதானமாய் முழுதாய் வாசிக்கும் ரிட்டையர்டு கோஷ்டியும் உண்டு.

சிலர் எல்லாவற்றையும் கடந்து ஓபிச்சுவரி, வரி விளம்பர Change of Name காலங்களில் ஊடுருவியிருக்கும் நியூமராலஜி மற்றும் மத மாற்றம், மேட்ரிமோனியல் பத்திகளில் பொதிந்துள்ள ஜாதீயம், மற்றும் வெள்ளைத் தோல் விருப்பங்களில் மூழ்கி சமூகக் கவலை கொள்வார்கள்.

இன்னும் சிலர், இவ்வாறு கவலை கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கர்ம ச்ரத்தையாய் 'Apropos your article dated...' என்று ஆரம்பித்து பண்டிதத்தனம் நிறைந்த கரடு முரடு வார்த்தைகளில் குமுதம் தலையங்கம் போல "யாராவது ஏதாவது செய்யவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்' என்ற ரீதியில் லெட்டர்ஸ் டு த எடிட்டரில் எழுதி அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.

(நானும் இம்மாதிரி லெட்டர்ஸ் டு த எடிட்டரில் எழுத ஆரம்பித்து, பேப்பரில் பேர் வெளியாக புளகாங்கிதமடைந்து, பின் முற்றி போய் விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் சேர விண்ணப்பித்து, கடைசி கட்டத்தில் நேர்காணலுக்கு விகடன் ஆபீசுக்கு சென்னை சென்று, அங்கு ஆசிரியர் பாலசுப்ரமணியத்தையும், மதனையும் ஆவென்று வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பியது அனைத்தும் ஒரு தனி வலைப்பதிவிற்கான விஷயங்கள்.)

இதில் ஏதாவதொரு வகை சொல்லப்படாமல் விடுபட்டிருந்தால், அதை சுட்டுபவர்க்கு நமீதா படம் வெளிவராத வெகுஜன வாரப்பத்திரிக்கை படிக்க வாய்க்க பிரார்த்திக்கிறேன்.

பேப்பரின் பிராட் ஷீட் பார்மட்டை முழுவதுமாய் பயன் படுத்துவார் என் தாத்தா. பேப்பரை ஏன் ஏடு என்கிறார்கள் என்பதை என் தாத்தா பேப்பர் படிப்பதைப் பார்ப்பவர்கள் சுலபமாய் புரிந்துகொள்வார்கள்.

ஒவ்வொரு ஷீட்டாய் படித்து அதை தூக்கிப் போடுவார். நான் அதை பிடித்துப் பிடித்துப் படிப்பேன். காட்டில் அரச மரத்தில் வசித்த பிரம்ம ராக்ஷஷன் சாப விமோசனம் பெற வேதத்தை அரச இலையில் தன் ரத்தத்தால் எழுதி கீழே போட அதை எடுத்துப் படித்த சிஷ்யர் போல உணர்ந்தேன்.

இப்போது அவர் இல்லை.

முழுவதாய் எனக்கே எனக்காய் பேப்பர்.

ஆனாலும் அதைப் படிப்பதில் முன்பு இருந்த தீவிரம் சற்று குறைந்திருப்பதாய் உணர்கிறேன். இப்போதிருக்கும் நிலையில், தொண்ணூறு வயதில் என் தாத்தாவிடம் இருந்த தீவிரம் இன்னும் ஐந்து வருடம் கழித்து எனக்கிருக்குமா என்று தெரியவில்லை.

அது வாய்க்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்; "more things are wrought by prayer; than this world dreams of..." என்று நம்பிக்கை தரும் டென்னிசனின் வார்த்தைகளைஒற்றி.