Saturday, July 24, 2010

மொட்டை தலையும் ... முழங்காலும்....

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பார்களே...
அது உண்மையாகிவிடும் போலிருக்கிறது...

பசு மாடுகளுக்கும் அதி நவீன கணினி தரவு மையத்திற்கும் (data center) என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

சம்பந்தம் இருக்கிறது என்கிறது உலகின் முன்னணி  கணினி தயாரிப்பு நிறுவனமான  ஹ்யூலட் பக்கார்ட் (HP ).

இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் கணினி தரவு மையம் என்பது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது.  இந்த தரவு மையங்களினால் நம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். தரவு மையங்களிலிருந்து வெளி வரும் வெப்பம், அதை இயக்க தேவைப்படும் மின்சாரம், மின்சார உற்பத்தியில்  ஏற்படும் சுட்ட்றுச் சூழல் கேடுகள், அந்த மையங்களுக்கு தேவையான குளிர் சாதனம், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வேகமாக வெப்பமயமாகிவரும் உலகை மேலும் வெப்பமயமாகாமல் தடுக்க உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.  முன்னணி கணினி நிறுவனங்களும் தற்சார்பு முறையில் இயங்கும் தரவு மையங்களுக்கான (sustainable data centers ) ஆராய்ச்சி செய்து வருகின்றன.  அம்மாதிரியான ஆராய்ச்சியில் தான் அமெரிக்காவில் இருக்கும் HP லாப்ஸ் இவ்வாறு கண்டறிந்திருக்கிறது.

10000 மாடுகளைக் கொண்ட ஒரு பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து ஒரு மெகா வாட் திறன் கொண்ட தரவு மையத்தை தற்சார்பு முறையில் இயக்கலாம் என்கிறார்கள் HP லாப்ஸ் விஞ்ஞானிகள்.   தரவு மையத்திலிருந்து வெளி வரும் வெப்பத்தை பயன் படுத்தி பண்ணை கழிவுகளை சிதைத்து வரும் மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தினால் தரவு மையத்தை தற்சார்பு முறையில் இயக்கலாம் என்று சொல்கிறார்கள். இதனால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் பெரிதும் குறைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இது எப்படி இயங்குகிறது என்று மேலும் புரிந்துகொள்ள கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.


இந்தியாவின் வளர்ச்சிக்கு அதன் கிராமங்கள் தான் முதுகெலும்பு என்றார் காந்திஜி. நாம் தான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ  என்று நினைக்கிறேன். எதிர் காலத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பால் பண்ணை, அதை சார்ந்த கணினி தரவு மையம் என்று நினைத்துப்பார்த்தால் அதன் சாத்தியங்கள் மலைக்க வைக்கிறது.  அவ்வாறு நினைக்கும் பொழுது பசுக்களை பெரிதும் நேசிக்கும் நம்முடைய 'பசுநேசன்' ராமராஜனும், லாலு பிரசாத் யாதவ்வும்  hp போன்ற தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளுக்குத்  தலைவராகும் விபரீத சாத்தியமும் தென்படுவது நம்முடைய பாக்கியமா என்றால் சொல்லத் தெரியவில்லை. 



********************************************


அட்டையை தவிர்த்துவிட்டு படித்தால் பெரும்பாலான  பத்திரிகைகள் குமுதம் போலவே இருக்கிறது என்று சில வருடங்களுக்கு  முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கிறது.  இப்போது அட்டையை தவிர்த்துவிட்டு படித்தால் பெரும்பாலான  பத்திரிகைகள் "முரசொலி" போலவே இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.