காதலாவது கத்திரிக்காயாவது என்று ஒரு சொலவடை நம்மிடையே புழக்கத்திலிருக்கிறது. கொஞ்சம் யோசித்தால், இக்காலத்தில் காதலால் ஏறக்குறைய ஒரு பிரச்சனையும் இல்லை என்றே சொல்லலாம். இப்போது பிரச்சனை எல்லாம் கத்திரிக்காயால் தான்.
ஆமாம். நீங்கள் நினைப்பது சரிதான்.
மரபணு மாற்றப்பட்ட BT கத்திரிக்காய் தான்.
ஆனால், BT கத்திரிக்காய் பற்றியோ அதன் சாதக(?) பாதகங்களைப் பற்றியோ இங்கு நான் பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அது பற்றி படிக்க விருப்பமிருப்பவர்கள் சுஜாதா தேசிகனின் வலைப்பூவில் படிக்கலாம். லிங்க் இதோ!
http://solvanam.com/?p=6484
நான் சொல்ல விழைவதெல்லாம் இந்த BT கத்திரிக்காயால் என் போன்ற கத்திரிக்காய் ரசிகர்களுக்கு நேர்ந்திருக்கும் சங்கடங்களைப் பற்றித்தான்.
ஆழ்ந்த வயலட் கலரில் (கத்திரிக்காய் கலர்?) வெள்ளை வரிகளுடனோ அல்லது வரி இல்லாமலோ பச்சை கிரீடத்துடன் குப்பலாய் கடையில் கூடையில் பிஞ்சுக் கத்திரிக்காய்கள் குவிந்திருக்கும் உள்ளம் கொள்ளை கொள்ளும் காட்சியே தனி அழகுதான்.
பிஞ்சுக் கத்திரிக்காய் தான் எத்தனை அழகு?
திண்மையும் மென்மையும் கொண்ட உடல், பள பளக்கும் தோல், பெண்களின் காதோரம் வழிந்தொழுகும் சிறிய முடிக்கற்றைப போல அமைந்திருக்கும் பச்சை கிரீடத்தின் அமைப்பு, நவ யுவதிகளின் காது மாட்டல் போல வளைந்திருக்கும் காம்பு, கணுக்காலுக்கு மேலே வெளிப்படுவதைப்போல பிஞ்சுக் கத்திரிக்காயை நறுக்கினால் வெளிப்படும் பளீர் வெளுப்பு...
ஒரு இளம் பெண்ணின் அழகுக்கு சற்றும் குறைவானதல்ல பிஞ்சுக் கத்திரிக்காயின் அழகு என்பது என் அபிப்ராயம்.
அழகு இப்படியென்றால், அதன் சுவை..
நினைக்கும் பொழுதே நாவினில் சுவைநீர்களின் குற்றாலப் பிரவாஹம்...
நல்ல பொடியான பிஞ்சுக் கத்திரிக்காய்களை காம்பை மட்டும் நீக்கி, நான்காய் கீறிப் பிளந்து மசாலா பொடி திணித்து நிறைய எண்ணெய் விட்டு, அந்த எண்ணையிலேயே வெந்த "எண்ணைக் கத்திரிக்காய்";
நீளவாக்கில் அரிந்து சிம்பிளாய் வெறும் வரமிளகாய் சீரகம் மற்றும் காயம் தாளித்து கமகமவென்று கத்திரிக்காயின் வாசத்துடன் காயம் சேர்ந்து மணக்கும் எண்ணெய் வதக்கல்;
ஆந்திரா ஸ்டைல் ரசவாங்கி;
கருப்பு கொத்துக்கடலை சேர்த்து கருவடாம் தாளித்து செய்யப்படும் கத்திரிக்காய் கூட்டு;
சற்றே பெரிய சைஸ் கத்திரிக்காய்களை தணலில் சுட்டு உரித்து மசித்து காயம் மற்றும் வரமிளகாய் தாளித்து தன் நீரிலேயே வெந்த கத்திரிக்காயின் மணத்துடன் செய்யப்படும் துவையல்;
இதையே தக்காளி வெங்காயம் மசாலா சேர்த்து செய்யப்படும் வடநாட்டு "பைங்கன் பர்த்தா";
சுட்டு மசித்த கத்திரிக்காய்களை வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய்களை சேர்த்து கொஞ்சம் தூக்கலாய் புளிக்கூட்டி செய்யப்படும் பொங்கல் மற்றும் இட்லிக்கு ஏர்வையான கொத்சு;
வெங்காயம், கொத்தமல்லி மசாலா மணக்கும் கத்திரிக்காய் சாதம் "வாங்கிபாத்"...
ம்ம்ம்ம்...
விவரிக்கும் போதே மேலே தொடரமுடியாமல் சுவைநீர் வழிந்து சட்டை நனைந்தாகிவிட்டது.
இப்படி, "எத்துணைக் கோடி கத்தரிக்காய் கறிகள் வைத்தாய் இறைவா" என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு ரசிகன். இந்தமாதிரி வெறித்தனமாய் நான்மட்டும் தனியாளாய் இல்லை என்று நினைக்கிறேன்.
இப்படி கத்திரிக்காயுடன் காதலாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் வில்லனாய் நுழைந்திருக்கிறது BT கத்திரிக்காய். (அசல் வில்லன் அதை அறிமுகப்படுத்தியிருக்கும் மான்சாண்டோ எனப்படும் அமெரிக்க பன்னாட்டு பூச்சிக்கொல்லி மற்றும் விதை நிறுவனம் தான்)
அரசாங்கம் இது சம்பந்தமாய் தற்காலிகமாய் தடை விதித்திருந்தாலும் நம் நாட்டில் அதையெல்லாம் மீறி புழக்கத்தில் வர ஏராளமாய் வழிகளிருக்கின்றன.
அதனால், முன்பு காதலுடன் பார்த்த கத்திரிக்காய்களை இப்பொழுது சற்று கிலியுடன் தான் பார்க்க முடிகிறது.
BT கத்திரிக்காய் பற்றி அறிந்தவன் கண்களுக்கு எல்லா கத்திரிக்காயும் பேயாய் தெரிகிறது. முன்பு இதே கத்திரிக்காய்தான் பெண்ணாய் தெரிந்தது!!
(அதெப்படி, பெண்ணும் பேயும் எப்போதும் சேர்ந்தே வருகிறது? பிரித்தே பார்க்க முடியாமல் அப்படி அவர்களுக்குளே என்ன சம்பந்தம்?)
காசியாத்திரை சென்றால் மிகவும் பிடித்தமான காய், கனி வகைகளில் ஒன்றை விட்டுவிட்டு வருவது மரபு. வயதான பின்பு நான் காசியாத்திரை போகும் பொழுது கத்திரிக்காயை விட்டு விட்டு வரலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது வெகு சீக்கிரமே காசியாத்திரை போவது என்று முடிவெடுத்து விட்டேன்.
பி.கு.: BT கத்திரிக்காய் வருவதற்கு ஆதரவாய் ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு குடிப்பதற்கு பூச்சிகொல்லி காக்டைலும் DDT தூவப்பட்ட உணவும் சாப்பிடுவதற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு வாசகர் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெசில் கடிதம் எழுதியிருந்தது அதில் வெளிப்படும் தார்மீக கோபத்தை தாண்டி ரசிக்கத்தக்கதாயிருக்கிறது.
சேஷன்
9 years ago