Monday, November 22, 2010

புது மொழி

BBS...

BTW...

CMi...

BIL...

PRL...

LOL...

ROFL...

WTF; whrz da p@rty?

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களுக்கு புரிந்தால் நீங்கள் கண்டிப்பாக 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  நீங்கள் இருபது வயதுக்கு மேற்பட்டவராக இருந்து மேற்படி சமாசாரம் முழுவதும் புரிந்தால் நீங்கள் மனதளவில் இன்னும் யூத்தாக மற்றும் கால தேச வர்த்தமானத்தோடு  up - to - date ஆக   இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேற்படி சமாசாரம் பாதி மட்டும் புரியுமானால் நீங்கள் இருபது வயதுக்கு கீழானவர் என்றால் யூத் லிஸ்டிலிரிந்து வெறுத்து விலக்கி வைக்கப்படும் அபாயதிலிருக்கிறீர்கள்.  இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் யூத்தாய் வேகமாக காலாவதியாகி வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ளவும்.

மேற்படி விஷயம் எதுவுமே உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் வயதானவர் லிஸ்டில் சேர்க்கப்பட்டு உங்களுக்கும் தற்போதைய ஜெனரேஷனுக்கும் உள்ள இடைவெளி ஒளி வருடங்களில் கணிக்கப்படும் அபாயதிலிருக்கிறீர்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சாம்பிள் இன்றைய புதிய தலைமுறையின் நவமொழி.  ஆங்கிலத்தில் "sms lingo" அல்லது "chatspeak".

இந்த மொழியில் தான் இன்றைய தலைமுறை மிக மிக அனாயாசமாக செல்போன்களிலும், 'ஸ்மார்ட்' போன்களிலும், ஜிடாக், யாஹூ போன்ற மெசஞ்சர்களிலும், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் உரையாடுகிறது, பேசுகிறது, சந்தோஷிக்கிறது, வருந்துகிறது, தகவல் பரிமாறுகிறது. ஆங்கிலத்தோடு தமிழ் ஹிந்தி மற்றும் இன்னபிற மொழிகளையும் கலந்து கட்டி அவியலாய் ஊடு கட்டி அடிக்கிறது.

தான் அலை பேசிக்கொண்டிருக்கையில் அருகாமையில் பெற்றோர் இருந்தால் PRL PCMi later என்று குறுஞ்செய்தி அனுப்புகிறது.  இம்மாதிரி குறுஞ்செய்திகளைப் படிக்க நேர்ந்தால் அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் பெற்றோர்கள் "ஞே" என்பதையும் தாண்டி முழியோமுழி என்று முழிக்கிறார்கள்.

இந்த மொழியில்  cryptical தன்மை கொஞ்சம் மற்றும்  convenience நிறைய என்று தோன்றுகிறது.
செல்போன்கள் வந்த காலத்தில் சிறிய கீபோர்டில் மெசேஜ் டைப் பண்ணும்  அசௌகர்யங்களில் இந்த மொழியின் தோற்றுவாய் இருந்திருக்கும் சாத்தியங்கள் ஏராளம்.  முன்புபோல் இல்லாமல் தற்போது டைப்ரைடிங் இன்ஸ்டிடியூட்கள் வழக்கொழிந்து போனதும் ஒரு காரணி என்றே சொல்லத்தோன்றுகிறது. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  140 கேரக்டர்களுக்குள் தங்களின் கருத்தை சொல்லவேண்டிய நிர்பந்தம் போன்றவை இம்மொழியின் வளர்ச்சிக்கு உரமாயிருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இம்மொழியின் cryptic தன்மை காலப்போக்கில் ரகசியம் கருதி ஏற்பட்டிருக்கலாம்.
 
இம்மொழிக்கு எதிராக பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.  ஒழுங்கான வார்தையமைப்பு இல்லை; இலக்கணம் அறவே இல்லை; சின்டாக்ஸ் இல்லை என்றெல்லாம்.  ஏன் இதெல்லாம் மொழியே இல்லை என்று விமர்சிப்பவர்களும் உண்டு. இந்த விமர்சனங்களில் உண்மை இருந்தாலும், அப்படி விமர்சிப்பவர் "பழம் பஞ்சாங்கம்" என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கித் தள்ளப்படும் அபாயமான சாத்தியக்கூறு தான் தென்படுகிறது.  மேலும், இதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  நீங்கள் எங்களை தொந்தரவு செய்யாமல் உங்கள் தி ஹிந்து ந்யூஸ்பேப்பர் மற்றும் ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி மற்றும் ரென் அண்டு மார்டின் இவைகளை கட்டிக்கொண்டு சௌக்கியமாய் இருங்கள் என்று அவர்கள் சொல்லக்கூடும். இம்மொழி தற்போது அலுவலகங்களில் அனுப்பப்படும் ஈ -மெயில்களிலும் மெல்ல ஊடுருவல் செய்திருப்பது தான் கொஞ்சம் கவலை அளிக்கிறது.  ஒரு சாரார் இதைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள்.  வருந்துகிறார்கள்.


இதற்க்கு தீர்வுதான் என்ன? என்று அறிந்துகொள்ள சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தினால், அவர் "பழகிப் பாப்போம்யா, அப்பத்தேன் புரியும்.  போங்கய்யா! நல்லா பழகுங்க" என்றே தீர்ப்பு சொல்லக் கூடும்.

என்ன?

r u redi 2 join da p@rty?

***********************************************


பெயர் பலகையில் தமிழ் வளர்க்கும் முயற்சியில் சில சுவாரஸ்யங்கள் :

ஸ்வீட் ஸ்டால்  - இனிப்பகம்...
ஸ்நாக்ஸ் பார் - நொறுவையகம்...
டீ ஸ்டால்  - தேநீரகம்....
பேக்கரி  - அடுமனையகம்...
சலூன்  - முடிதிருத்தகம்...
ஹார்டுவேர் - வன்பொருளகம்...

ஒரு சின்ன சந்தேகம்!!

இப்படி அகம்.. அகம்.. என்றே எல்லாம் தமிழ் 'படுத்த'ப்பட்டிருக்கும் போது toilet என்பதற்கு மட்டும் ஏன் கழிப்பகம் (அ) விடிப்பகம் (அ) பேளகம் என்று மாற்றாமல் கழிப்பறை என்றே விட்டு வைத்திருக்கிறார்கள்?

சரியான விடை தெரிந்தவர்கள் கூறினால் அவர்களுக்கு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் கூடுதலாய் கிடைக்கும்படி இயற்கையிடம் பிரார்த்தனை செய்கிறேன். 

1 comment:

vshe.blogspot.com said...

மேற்கூறிய வர்த்தக மையங்களிடம் அகத்தே இருந்து சர்வீஸ் / பொருள் பெறுகிறீர். புறத்தே செல்கிறீர்.
ஆனால் கழிப்பறை சமாச்சாரத்தில், கழித்தல் என்னும் புறம் தள்ளும் செயல் அல்லவா நடை பெறுகிறது?
எனவே, புறக்கடை மருவி புழக்கடை ஆனதோ?